சர்க்கரை நோய் பாதிப்புகள்



தவிர்க்கும் வழிகள்!

நாளுக்குநாள், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவரும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையால் உலகளவில் சரக்கரைநோயில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. 
இதற்கு முக்கிய காரணம் நமது நவீன உணவு பழக்கமும், மறந்துவிட்ட உணவுமுறையும்தான் என்கிறார் பிளாஸ்டிக் சர்ஜன் மற்றும் பொதுநல மருத்துவரான ஆர்.சரவணன். சர்க்கரை நோயின் பாதிப்புகள் மற்றும் தீர்வு குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

பொதுவாக நாம் உண்ணும் உணவானது சர்க்கரையாக மாறி நமது ரத்தத்தில் கலக்கிறது. இதை கணையம் இன்சுலினாக மாற்றி ரத்தக்குழாய்கள் மூலம் செல்களுக்கு பிரித்து அனுப்புகிறது. அதாவது, இன்சுலின் உயிரணுக்களின் கதவை திறக்கும் சாவியாக செயல்படுகிறது. இந்நிலையில் இன்சுலின் சுரப்பு சரிவர வேலை செய்யாதபோது சர்க்கரைநோய் ஏற்படுகிறது.  சர்க்கரைநோய் பெரும்பாலும் உணவு முறையால் ஏற்படுகிறது.

முந்தைய காலங்களில் அனைவரும் உடல் உழைக்க வேலை செய்தனர். அதனால், அவர்கள் உண்ட உணவு விரைவில் செரிமானம் ஆகியது. மேலும், அவர்கள் சிறுதானியங்களை தினசரி உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டனர். 

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கைமுறை மாற்றத்தால், உடல் உழைப்பு குறைந்துவிட்டது. அதுபோன்று, சிறுதானிய உணவு பழக்கமும் மறந்து, மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்ஸை மட்டுமே நம்பி நமது உணவு உட்கொள்ளல் இருக்கிறது.  எனவே சர்க்கரைநோயும் அதிகரித்து வருகிறது.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

பொதுவாக, பாலிஃபேஜியா, பாலிடிப்சியா, பாலியூரியா என்று பிரிக்கப்படுகிறது. அதாவது அதிகபசி, அதிகதாகம், அதிகளவில் சிறுநீர் கழிப்பது.  உடல் சோர்வு, கண் பார்வை மங்குதல், உடல் எடை இழப்பு, நுரையீரல்தொற்று, சிறுநீரகதொற்று, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுவது. காலில் மதமதப்பு, குத்தல் உணர்வு, கால் மறத்துப்போதல் போன்ற அறிகுறிகள் சர்க்கரை நோயாக இருக்கக்கூடும்.

சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று இன்சுலின்சுரப்பு குறைவது அல்லது இன்சுலின்சுரப்பு அதிகரிப்பது. அதாவது கணையம் போதுமான இன்சுலினை சுரக்காதபோது ஒரு வகையான பாதிப்புகள் ஏற்படும்.  

அல்லது கணையம் இன்சுலினை போதுமான அளவு சுரந்தாலும், அது சரியாக செல்களுக்கு போய்ச் சேராமல் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள். இதைதான் டைப்2 டயாபடீஸ் என்று சொல்லப்படுகிறது.  இதில்   குறைந்த வயதில் ஏற்படும் சர்க்கரை நோயை டைப் 1 டயாபடீக் என்றும் 40 வயதுக்கு பிறகு ஏற்படும் சர்க்கரை நோயை டைப் 2 என்றும் சொல்கிறோம். இதில் டைப்2தான் பெரும்பாலான அளவில் காணப்படுகிறது.  

இதில் தலை முதல் பாதம் வரை பல்வேறான பாதிப்புகள் பலருக்கும் ஏற்படுகிறது. உதாரணமாக, தலை முடி கொட்டுதல் தொடங்கி, கண் பாதிப்புகள், கண் நரம்பு பாதிப்பு, சிறுநீரக தொற்று, வலிப்பு மூலம் ஏற்படும் மூளைபாதிப்பு, ஹார்ட் அட்டக் போன்றவை அதிகளவில் காணப்படும்.  

அதாவது, பொதுவானவர்களுக்கு ஹார்ட் அட்டக் வருவதை காட்டிலும் சர்க்கரை நோயாளிக்கு நான்கு மடங்கு வாய்ப்பு அதிகம். அதுபோன்று மூளை பாதிப்பு இரு மடங்கு வாய்ப்பு அதிகம்.  இதில் சிறுநீரக கோளாறுகள்தான் 17 மடங்கு அதிகமாக வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுபோன்று கால் நரம்புகள் பாதிப்பு, ரத்த நாளங்கள் பாதிப்பு போன்றவை ஏற்படும்.

 பராமரிக்கும் முறை

ஒருவருக்கு சர்க்கரைநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அதன்பின் அவர்கள், தங்களை சரியானமுறையில் பராமரிப்பது மிக மிக அவசியமாகும். உதாரணமாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்த சர்க்கரை அளவு, சிறுநீரின் சர்க்கரை அளவை கண்டறிய வேண்டும். இது தவிர்த்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிச்சயமாக எச்பி1சி யின் அளவு தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், வருடத்திற்கு ஒருமுறை யூரியா, கிரியாட்டினின் அளவு மைக்ரோஅல்புமின் என்கிற புரதத்தின் அளவை கண்டறிந்து கொள்ளவேண்டும்.

பின்னர் ரத்தத்தில் கொழுப்பின் அளவு போன்றவற்றை   தெரிந்து கொள்ள வேண்டும்.  பின்னர், வருடத்திற்கு ஒருமுறை கட்டாயமாக கால் பாதம் மற்றும் கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் உணவை சரியான அளவில் பிரித்து உண்ணவேண்டும். 

அதுபோன்று செருப்பு இல்லாமல் வெறும் காலில் எங்கும் நடந்து போகக்கூடாது.  ஏன்னென்றால், பாதப்புண், பாத கொப்புளங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால், பாதங்களை மிக மிக கவனமாக பராமரிக்க வேண்டும். அப்படி சரியாக கவனிக்கவில்லை என்றால் கால்களை இழக்கவும் நேரிடும்.  எனவே பாத பராமரிப்பு மிக மிக அவசியம்.

இதனை மருத்துவ மொழியில் சொன்னால், ஒரே நேரத்தில் பாம்பை பார்த்தாலோ அல்லது காலில் புண்ணை பார்த்தாலோ பாம்பை விட்டுவிட்டு பாத புண்ணைதான் முதலில் கவனிக்க வேண்டும்.

அதுபோன்று சிலர் ஒருமுறை இன்சுலின் எடுத்துக் கொண்டால் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகும் என்று நினைத்து எடுக்க மாட்டார்கள். அது முற்றிலும் தவறான ஒன்று.  இன்சுலின் என்பது சர்க்கரைநோயாளிகளுக்கு கிடைத்த வரமாகும். அதனால் அதை தவிர்க்க கூடாது. அதுபோன்று உடற்பயிற்சி, உணவுமுறையை முறையாக கடைபிடித்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

- ஸ்ரீதேவி குமரேசன்