குடும்ப டாக்டர்கள் ஏன் தேவை?



ஒரு மருத்துவப் பார்வை!

மருத்துவ நிபுணர்களை சில ஆண்டுகளுக்கு முன்பு அவ்வளவு சுலபத்தில் சந்தித்துவிட முடியாது. ஆனால் இன்று இந்தச் சூழல் மாறியிருக்கிறது. மருத்துவர்களை எளிதில் சந்தித்து ஆலோசனைகளை பெறும் காலக்கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். 
ஆனால், எத்தனை மருத்துவர்களைச் சந்தித்தாலும், நம்முடைய குடும்பத்திற்கென, நம்முடைய குடும்பத்திலுள்ள ஒவ்வொருத்தருடைய உடல்நலம், ஆரோக்கியம் குறித்து முழுமையாக தெரிந்து வைத்திருக்கும் குடும்ப மருத்துவரின் இடத்தை மற்றவர்களால் அவ்வளவு எளிதாக நிரப்பிவிட முடியாது.

எக்கச்சக்கமான நோயாளிகளுடன் கலந்துரையாடியதில், அவர்களுடைய வாழ்க்கையில் உடல்நல ஆரோக்கிய பிரச்சினைகள், அவற்றுக்கான சிகிச்சைகள் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. ஒரு குடும்ப மருத்துவர் ஆலோசனையின் படி நாம் எடுத்து கொள்ளும் அடிப்படையான சிகிச்சைக்கு இருக்கும் முக்கியத்துவம், நாம் நினைப்பதைவிட மிக அதிகம் என்பது இன்னும் நம்மில் பலர் உணரவில்லை என்பது தெளிவாக உணர்த்துகிறது.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கூடவே பயணிக்கும் மருத்துவ நண்பர்:

உங்களுடைய உடல் நலம் சரியில்லாத போது, உடனடி சிகிச்சைக்காக துணை நிற்கும் குடும்ப மருத்துவர் ஒரு சாதாரணமான நபர் அல்ல. உங்களுடைய இளம் வயதிலிருந்து, நீங்கள் வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் இருக்கும் இத்தருணம் வரையில், பல ஆண்டுகளாக உங்கள் உடல்நலனுக்கு கைக்கொடுத்திருக்கும் மருத்துவ நண்பராக இருக்கிறார் என்பது புரியும். 

உங்களுக்கும் குடும்ப மருத்துவருக்கும் இடையில் நீடித்து வரும் பல ஆண்டுகால உறவினால், உங்களுடைய உடல்நலன், பிரச்சினைகள் குறித்து அவருக்கு ஒரு முழுமையான புரிதல்
இருக்கும்.

இதற்கு முன்பிருந்த நோய்கள், எந்த மருந்தைக் கொடுத்தால் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும், எந்த மருந்து ஒவ்வாமையை ஏற்படுத்தும், அறுவைசிகிச்சை ஏதேனும் செய்திருந்தால் அதற்கேற்ற வகையில் என்ன சிகிச்சை அளிக்க வேண்டும், உங்கள் குடும்பத்தில் தொடரும் பரம்பரை வியாதிகள், மரபணு பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்பது போன்ற முழுவிவரங்களும் அவருக்கு அத்துப்படியாக இருக்கும். இதனால் உங்களுக்கு ஏற்ற அடிப்படை  சிகிச்சையை, அவரால் உடனடியாக வழங்க முடியும்.

உங்களுடைய உடல் நிலை குறித்து குடும்ப மருத்துவர் நன்றாக அறிந்திருப்பதால், நீங்கள் ஒவ்வொரு முறை அவரைச் சந்திக்கும் போதும், அந்த சந்திப்பானது உங்களுடைய தனிப்பட்ட உடல் ஆரோக்கியம் குறித்த பிரத்தியேக சந்திப்பாகவே அமையும். ஆனால் நாம் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மருத்துவரைச் சந்திக்கும் போது, நம்முடைய உடல் ஆரோக்கியம் குறித்த முழு தகவல்களையும் ஒவ்வொரு முறையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அவர்கள் அதைப் புரிந்து, ஒவ்வொரு முறையும் புதிதாக சிகிச்சையைத் தொடங்குவார்கள். அதற்கு பதிலாக, உங்கள் குடும்ப மருத்துவர் என்றால் அவர் உங்கள் உடலில் ஏற்படும் மிக நுட்பமான மாற்றங்களைக் கண்டறிந்து, தொடர்பில்லாததாகத் தோன்றும் அறிகுறிகளை புரிந்து கொண்டு, பல வருடங்களாக மேற்கோண்டு வரும் மருத்துவ பராமரிப்பின் அடிப்படையில் தகுந்த முடிவுகளை எடுக்க முடியும்.

குடும்ப மருத்துவர் உடனான நீண்ட கால உறவு உருவாக்கும் பலன்கள்

இப்படியொரு சூழ்நிலையை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்: நீங்கள் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த ஒரு குடும்ப மருத்துவர் இருந்தால்,  அவர் ஏற்கனவே உங்கள் மருத்துவ வரலாற்றைப் பற்றி அறிந்திருப்பதால்  எந்த சிகிச்சைகள் முன்பு பலன் அளித்தன என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

மேலும் நீங்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன், அதற்கு பின் தொடர வேண்டிய மருத்துவப் பராமரிப்பை எந்தவிதமான தடைகளும் இல்லாமல் அவரால் ஒருங்கிணைக்க முடியும். இந்தத் தொடர்ச்சியான மருத்துவ ஆலோசனை இல்லாவிட்டால், நீங்கள் மற்றொரு நோயாளியாகதான் சிகிச்சைப் பெற ஆரம்பிப்பீர்கள். இதனால் உங்களுக்கான சரியான சிகிச்சை மற்றும் பாதிப்பிலிருந்து மீண்டெழ உதவும் முக்கியமான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும்.

தொடர்ந்து மருத்துவப் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நீங்கள் இருக்கும் போது, நமக்கென ஒரு குடும்ப மருத்துவர்  இருக்கவேண்டியது மிக மிக அவசியம்.  உதாரணமாக நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்த பிரச்சினை இருப்பதாக வைத்து  கொள்ளுவோம்.  

இப்பிரச்சினைகள் வெளிப்படையாக தெரியும் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் மெல்ல மெல்ல தீவிரமான சிக்கல்களை உருவாக்கக்கூடும். இதனால், தொடர்ந்து நீண்ட காலம் சிகிச்சையளிக்கும் குடும்ப மருத்துவர் மூலம் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பராமரிப்பு, படிப்படியாக அவசியமான மருந்துகளை மாற்றுவது போன்றவை நம்முடைய உயிரைக் காக்கும்.

அறிகுறிகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணங்களை புரிந்து கொள்ளும் குடும்ப மருத்துவர்:

குடும்ப மருத்துவத்தின் தனிச்சிறப்பை இங்கேதான் நம்மால்  தெளிவாக தெரிந்துகொள்ள முடியும். நம் உடலில் வெளிப்படும் அறிகுறிகள், பெரும்பாலும் ஒரு பெரிய வாழ்க்கைப் பிரச்சனையின் வெளிப்பாடாக இருக்கக்கூடும்.

தொடர்ச்சியான தலைவலி, விவரிக்க முடியாத சோர்வு அல்லது மீண்டும் மீண்டும் ஏற்படும் வயிற்றுப் பிரச்சினைகள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி சிகிச்சைப் பெற வருவார்கள். இவை சாதாரண மருத்துவப் பிரச்சனைகள் போல தோன்றினாலும்,  அவை பெரும்பாலும் மன அழுத்தம், உறவுச் சிக்கல்கள், வேலை அழுத்தம் அல்லது மனஅழுத்த பிரச்சினைகளின் விளைவாக இருக்கக்கூடும்.

நம் பிரச்சினைகளைப் பற்றி முழுமையான  பார்வையை அளிக்கும் குடும்ப மருத்துவர் உறவுகள்

ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு நினைவில் வருகிறது-நாற்பதுகளிலுள்ள ஒரு பெண், காரணமே இல்லாமல் பல்வேறு வலி மற்றும் தொந்தரவுகளுடன் மீண்டும் மீண்டும் மருத்துவரைச் சந்தித்தார். அவருடைய பிரச்சினைகளுக்கு தெளிவான மருத்துவ காரணம் எதுவும் இல்லை என்று தோன்றியது.

தொடர்ந்து நடைபெற்ற சந்திப்புகள், அவருடனான உரையாடல்கள் மூலம், குடும்ப  சுமைகளைச் சமாளிக்க போராடிக் கொண்டிருந்ததும், குடும்பத்தில் உள்ளவர்களைக் கவனித்து கொள்வதில் முழுமையாக மூழ்கி இருந்ததும் தெரிய வந்தது. 

இந்த மூலக்காரணங்களின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனைகள், கவுன்சிலிங், மன அழுத்தத்தை சமாளிக்க உதவும் வழிமுறைகள் மூலம் அவரது வலிகளுக்கு தீர்வு காண முடிந்தது. இதன் மூலம் அவருக்கு இருந்த உடல் நல பிரச்சினைகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்த வகையான முழுமையான அணுகுமுறையானது, நோயாளியின் உடல், மனம், சூழ்நிலை எல்லாவற்றையும் தொடர்ந்து கவனிக்க நேரமும் நம்பிக்கையும் தேவைப்படும் ஒரு பயணமாகும். இதை வெற்றிகரமாக மேற்கொள்ள குடும்ப மருத்துவருடனான உறவு நல்ல பலன்களை அளிக்கும்.

உங்கள் உடல்நல வழிகாட்டியாக செயல்படும் குடும்ப மருத்துவர்

இன்றைய மருத்துவ சந்தையில், நீங்களாகவே உங்களுக்கு என்ன நோய் அல்லது பிரச்சினை என்பது இணையத்தில் தேடிப்பார்த்து, நேரடியாகவே மருத்துவர்களை சந்திக்க விரும்புவது சாதாரணமாகி வருகிறது. நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது முக்கியம் தான். 

ஆனால்  இந்த அணுகுமுறை அதிக செலவு உள்ளதாகவும், தேவையற்ற பாதைகளிலும் அழைத்துச் செல்லக்கூடும். எடுத்துக்காட்டாக, நீண்ட நாட்களாக உள்ள இருமல் இருந்தால், நாம் உடனே சுவாச நுரையீரல் மருத்துவ நிபுணரிடம் செல்லலாம் என்று தோன்றலாம். ஆனால் உண்மையான காரணம் சாதாரண ஆசிட் ரீப்ளக்ஸ் ஆக கூட இருக்கலாம், எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் சில மருந்துகள் மூலமாகவே இதற்கான தீர்வு சாத்தியமாக இருக்கலாம்.

தலைவலி தொடர்ந்து இருப்பதால் சிலர் உடனே நரம்பியல் நிபுணரை அணுகி ஸ்கேன் எடுக்க நினைப்பார்கள். ஆனால் உண்மையான பிரச்சினையாக மன அழுத்தம், பதட்டம், மோசமான தூக்கப் பழக்கம் அல்லது பார்வை சக்திக்கு ஏற்ற புதுப்பிக்கப்பட்ட கண்ணாடிகளை பயன்படுத்தாததால் உண்டாகும் பார்வைப் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் கூட இருக்கலாம்.
இதுபோன்று பல்வேறு சூழல்களில், நம்முடைய குடும்ப மருத்துவர்கள் மருத்துவக் கோணத்தில் ஆராய்ந்தறியும் திறமையான நபராகவும் செயல்பட்டு, தேவையற்ற சிக்கல்கள் இல்லாமல் மிகச்சரியான பராமரிப்பை நீங்கள் பெறுவதை உறுதிசெய்ய உதவுகிறார்கள்.

உங்கள் மருத்துவக் கதை ஒன்றாகச் சேரும் இடம்-குடும்ப மருத்துவர்:

உடனடி மருத்துவ பராமரிப்பைத் தாண்டி, குடும்ப மருத்துவர்கள் உங்களைப் பற்றிய  முழுமையான சுகாதாரத் தகவல்களின் மையக் களமாக செயல் படுகிறார்கள். நீங்கள் போட்டுக் கொண்ட தடுப்பூசிகள் எப்போது, எதற்காக என்பது குறித்த விவரங்கள், மருந்துகளால் ஏற்பட்ட எதிர்வினைகள், பரிசோதனை கூட முடிவுகள் மற்றும் நிபுணர் கருத்துகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் தொகுத்து வைத்திருக்க உதவுகிறார்கள். இதனால் எதிர்பாராத அவசரநிலைகளிலும் நாம் புதிய மருத்துவரை சந்திக்கும்போதும், இந்த தகவல்கள் அனைத்தும் நம்மைப் பற்றிய  மருத்துவ நிலைமைகளை எடுத்து கூறும் மாபெரும் தளமாக அமைகிறது.

நோய் வரும் முன்னதாகவே தடுப்பு மருத்துவத்தில் உங்களைக் காப்பாற்றுவதில் கில்லாடி, குடும்ப மருத்துவர்:

நோயை குணப்படுத்துவதற்கு அப்பால், அதை வரும் முன் தடுக்க உதவும் ஆபத்பாந்தவனாக குடும்ப மருத்துவர் இருக்கிறார் என்பதே உண்மை. நோயாளிகள் தங்கள் உடலில் உண்டாகும் முக்கிய அறிகுறிகளை எவ்வாறு கண்காணிப்பது என்பது குறித்து புரிய வைப்பது, எதை எச்சரிக்கையாக கவனிக்க வேண்டும் என்பதையும், எதிர்கால சுகாதாரச் சிக்கல்களைத் தடுக்கும் வாழ்க்கைமுறை மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பதையும் எளிமையாகக் கற்பிக்கிறார்கள். இந்த முன்னெச்சரிக்கை அணுகுமுறை பெரும்பாலும் சிறிய பிரச்சினைகள் பெரிய மருத்துவ நெருக்கடிகளாக மாறுவதைத் தடுக்கிறது.

பாதுகாப்பும், பரீட்ச்சயமும் உருவாக்கும் நீண்டகால மருத்துவ உறவு :

மிகவும் முக்கியமான அம்சம் என்னவென்றால், ஒரு குடும்ப மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே உருவாகும் உறவு பல ஆண்டுகள், பல தலைமுறைகள் வரை ஆழமான ஒன்றாக தொடரக்கூடும். 

இதனால் பல நோயாளிகள் தங்களுடைய குழந்தைகள், வாழ்க்கைத் துணை, தந்தை-தாய் என எல்லோரையும் அதே மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் அளவுக்கு அந்த உறவு நம்பிக்கையான ஒன்றாக மாறிவிடும்.  இது ஒட்டுமொத்த குடும்பத்திற்குமான மருத்துவ பராமரிப்பை,  பரிச்சயமும் பாதுகாப்பும் நிறைந்த சூழலில் வழங்கும் ஒரு அற்புதமான தளமாக மாற்றிவிடுகிறது என்பதை நீங்கள் நேரடியாகவே பார்த்து இருக்கலாம்.

முக்கிய தீர்மானங்களில் நம்பிக்கையளிக்கும் உறவு:    

நீண்டகாலமாக குடும்ப மருத்துவருடன்  உருவான இந்த உறவு,  மருத்துவ அடிப்படையில் நாம் எடுக்கவேண்டிய பெரும் முடிவுகளை  தீர்மானிக்க உதவும் ஒன்றாக உதவுகிறது. சில இக்கட்டான சந்தர்ப்பங்களில், சிகிச்சை விருப்பங்களை தேர்வுசெய்வது, வாழ்நாள் முழுமைக்குமான மருத்துவ முறைகளைப் பற்றி பகிர்ந்துகொள்வது அல்லது பரம்பரை பரம்பரையாக குடும்பத்தில் இருக்கும் சிக்கலான நோய்நிலைகளை எதிர்கொள்வது போன்றவற்றில் குடும்ப மருத்துவருடனான நீண்ட நாள் உறவு வழிகாட்டியாகவும்
ஆறுதலாகவும் அமைகிறது.

அதிகரித்து வரும் டிஜிட்டல் மனிதம் தேவைப்படும் தருணங்கள்:

தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் டெலிமெடிசின் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பரிசோதனைகள் மருத்துவ உலகத்தையே மாற்றிக் கொண்டிருக்கின்றன. அதே வேளையில், தனிப்பட்ட உறவுகளின் அடிப்படையிலான மருத்துவ பராமரிப்புக்கான அடிப்படை மனிதத் தேவை மாறாமல் உள்ளது. குடும்ப மருத்துவர்கள், இன்றைய வேகமான மருத்துவ உலகில் மிகவும் அபூர்வமாகிப் போன ஒரு அரிய விஷயத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.

உங்களது உடல்நல பிரச்சினைகளை அவசரம் காட்டாமல் பொறுமையாக கேட்டுக் கொள்வது, உங்கள் வாழ்க்கையை முழுமையாக அறிந்திருப்பது, நீங்கள் ஒரு நோயாளியாக இல்லாமல் ஒரு மனிதராக இருக்கின்றீர்கள் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளும் அந்த உண்மையான பராமரிப்பை குடும்ப மருத்துவர்களால் மட்டுமே கொடுக்கமுடியும்.   

பொது நல மருத்துவர் சாதனா தவப்பழனி