ரத்தசோகையை வெல்வோம்!



நோய் நாடி

ரத்த சோகை என்பது உலகளவில் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து கோளாறு என்று மருத்துவத் துறை கூறுகிறது. இதில் பெரும்பாலும் பெண்களும், பெண் குழந்தைகளும் ரத்த சோகையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
ஏனென்றால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயில் குறிப்பிட்ட அளவு ரத்தப்போக்கு மாதம் மாதம் வெளியேறுகிறது. அதனால் ஆண், பெண் இருவருக்கும் ரத்த சோகை ஏற்படுகிறது என்றாலும், உலகளவில் ஐம்பது சதவீதம் பாதிப்படைபவர்கள் பெண்களாக இருக்கிறார்கள்.

ரத்த சோகை என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்

ரத்த சோகை என்றால் என்ன?

ரத்த சோகை என்பது ஹீமோகுளோபின் 12 என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த அளவுக்கு கீழ் குறைந்திருந்தால், அவர் ரத்த சோகையால் பாதிக்கப்
பட்டுள்ளார் என்று அர்த்தமாகிறது.

ஹீமோகுளோபின் என்றால் என்ன?

ஹீமோகுளோபின் என்பது உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் ஆக்சிஜனை முறையாக எடுத்துக்கொண்டு போவதாகும். அதனால்தான், ஹீமோகுளோபின் அளவு பனிரெண்டுக்கும் குறைவாகும் போது, ரத்தசோகை ஏற்படுகிறது.

ரத்த சோகையின் அறிகுறிகள்

ரத்த சோகையால் பாதிக்கப்படும் போது, உடல் வலி அதிகமாக இருக்கும். அதனால் மிகவும் சோர்வாக காணப்படுவார்கள். உதாரணத்திற்கு, ஒரு நபரால் நான்கு வேலை செய்ய முடியும் என்கிற நிலையில், ரத்த சோகை பாதிப்பால், இரண்டு வேலை மட்டுமே செய்ய முடியும்.

மேலும், மூளைக்கு ரத்த ஓட்டம் செல்வது குறைவாக இருக்கும். அதனால் தலைவலியும் ஏற்படும். இந்த காரணங்களை எல்லாம் பெரும்பாலும் மக்கள் கண்டுகொள்ளாமல் இருந்து விடுவார்கள். 

இவற்றை சரி செய்து விட்டாலே, பல பிரச்சனைகள் உடலளவில் தடுக்கப்படும். ஆனால், இவற்றை சரி செய்யாமல் இருக்கும் போது, பல வருடங்களாக ரத்த சோகை பாதிப்பில் மக்கள் இருக்கும் போது, அதன் பாதிப்பு உடலில் தீவிரமடையும்.

உதாரணத்திற்கு, ரத்த சோகையால் மூளை பாதிக்கப்படும் போது, டிமென்ஷியா வர வாய்ப்புகள் அதிகம். ஆக்சிஜன் லெவல் குறைவாக இருப்பதால், ஹார்ட்பீட் அதிகமாகத் துடிக்க ஆரம்பித்து விடும். ஏனென்றால், ரத்த ஓட்டத்தை உடலுக்குள் செலுத்துவதற்கு இருதயம் பொறுப்பேற்று விடும். அப்படி பொறுப்பேற்கும் போது, ஹார்ட் பெலியர் ஏற்படும் அல்லது சீரான துடிப்பற்ற அளவில் இருதயம் இயங்கும். மேலும் அடிக்கடி தொற்று நோய்க்கு ஆளாவார்கள்.

ரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள்?

ரத்த சோகை ஏற்படுவதற்கு மிக முக்கியமான நான்கு காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்றால்,

*இரும்புச்சத்து குறைபாடு
*விட்டமின் பி 12 குறைபாடு
*போலிக் ஆசிட் குறைபாடு
*தைராய்டு பிரச்சனைகள்.

இந்த நான்கு காரணங்களால், உடலளவில் நாம் என்ன மாதிரியான பாதிப்புக்கு உள்ளாகிறோம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

1. இரும்புச் சத்து குறைபாடு

இரும்புச் சத்து உணவு வகைகளை குறைவாக சாப்பிடுவதால் ரத்த சோகை ஏற்படும் அல்லது வயிற்று பூச்சி என்று சொல்லக்கூடிய ஒரு வகையான பூச்சி நமது வயிற்றில் ரத்த துளிகளை குடிக்க ஆரம்பிக்கும். அந்த பூச்சி ரத்த துளிகளை குடிப்பதால், மலம் கழிக்கும் போது, ரத்தம் வெளியேற வாய்ப்புகள் இருக்கிறது. இந்த பாதிப்பைத் தடுக்க தான், அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகளில் மாத்திரைகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை அனைத்து வயதினருக்கும் டி வார்மிங் மாத்திரை இலவசமாக வழங்குகிறார்கள். ஆனால், மக்கள் பெரும்பாலும் இந்த மாத்திரை அதிகமாக கசக்கிறது என்றும், எளிதாக கரையவில்லை என்றும் சாப்பிடாமல் தவிர்த்து விடுகிறார்கள். 

உண்மையில், அரசு கொடுக்கும் இந்த மாத்திரையை முறையாக எடுக்கும் போது, வயிற்று வழியாக ஏற்படும் ரத்தப் போக்கினை தடுக்க முடியும். மேலும், நல்ல ஆரோக்கியமான பச்சைக் காய்கறிகள் மற்றும் சிக்கன், கீரை வகைகளை தொடர்ந்து சாப்பிடும் போது, இரும்புச் சத்து உடலில் அதிகமாகும்.

2. விட்டமின் பி 12 குறைபாடு

பெரும்பாலும் விட்டமின் பி 12 குறைபாடு ஏற்படக்காரணம், அதீத ஈடுபாட்டுடன் சைவ உணவு வகைகளை மட்டுமே எடுத்துக் கொள்வதாகும். அதற்காக சைவ உணவு சாப்பிடக் கூடாதா என்றால் அப்படியில்லை. 

சைவ உணவு சாப்பிடுபவர்கள் சிலர் பால், தயிர் கூட எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்கள் எளிதாக வைட்டமின் பி 12 குறைபாட்டால் பாதிப்புக்குள்ளாவார்கள். எந்த உணவாக இருந்தாலும், உடலுக்கு தேவையான சத்து இருக்கிறது என்றால், அதில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தான் கூறுகிறேன்.

அதனால் பால், தயிர் சாப்பிட முயற்சி செய்யுங்கள். அப்பொழுது மட்டுமே சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இந்த குறைபாட்டை சரி செய்ய முடியும். அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு விட்டமின் பி 12 குறைபாடு ஏற்படுவது குறைவாக மட்டுமே இருக்கிறது. 

மேலும் சில காரணங்களாலும் இந்த குறைபாடு ஏற்படும். பெரும்பாலும் அதீத சைவ உணவின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் தான் வைட்டமின் பி12 குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

3. போலிக் ஆசிட் குறைபாடு

போலிக் ஆசிட் குறைபாடு எப்பொழுது ஏற்படுமென்றால், பெரும்பாலும் உடலின் தேவை அதிகமாகும் மட்டுமே ஏற்படும். உடலின் வளர்ச்சி அதிகமாகும் போது, போலிக் ஆசிட் தேவையும் அதிகமாகும்.

உதாரணத்திற்கு, பத்து வயது முதல் பதினாறு வயது வரை மனிதர்கள் வேகமாக வளரக்கூடிய பருவமாகும். இந்த பருவத்தில் போலிக் ஆசிட் தேவை அதிகமாகயிருக்கும். அதனால் தான், வளர்ற புள்ள நல்லா சாப்பிடணும் என்று பெரியவர்கள் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம்.

மேலும் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் போலிக் ஆசிட் தேவை அதிகமாகயிருக்கும். பெண்களும் இந்தப் பருவத்தில் தான் அதீத சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உறவினர்கள் கூறுவதையும் கேட்டிருக்கிறோம். கர்ப்பம் தரிப்பதற்கு ஒரு மாதம் முன்பிலிருந்து ஆரம்பித்து, கர்ப்பமான அடுத்த மூன்று மாதம் வரை, பெண்களுக்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் போலிக் ஆசிட் மாத்திரையை நான்கு மாதம் சாப்பிடக் கொடுப்பார்கள். 

இந்த மாத்திரை எடுக்கும்போது, குழந்தையின் வளர்ச்சியும், தாயின் வளர்ச்சியும் சீராக இருக்கும். இப்படியாக இந்த மூன்று பருவத்தில் போலிக் ஆசிட்டின் தேவை அதிகமாயிருக்கும். இந்த நேரத்தில் சரியாக உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் போகும் போது, அவர்கள் போலிக் ஆசிட் குறைபட்டால் பாதிக்கப்படுவார்கள்.

4. தைராய்டு பிரச்னை

பெண்களுக்கு பொதுவாக தைராய்டு பிரச்னை ஏற்படுவது என்பது மிகவும் இயல்பாகி விட்டது. அதனால் பெண்களுக்கு ரத்த சோகை இருக்கிறது என்று தெரிய வரும் போது, தைராய்டு டெஸ்ட் எடுத்து பார்த்துக் கொள்வது நல்லது. 

தைராய்டு இருந்தது என்றால், அதற்கான சிகிச்சையை எடுக்கும் போது, பல பிரச்னைகள் பெண்களுக்கு தீர்வாக அமையும்.இந்த நான்கு குறைபாட்டையும் சரி செய்வதற்கான முறைகளை தெரிந்து கொள்ளும் போது, ரத்த சோகை ஏற்படுவதையும் தவிர்த்து விடலாம்.

ரத்த சோகை வராமல் தடுப்பது எப்படி?           
        
பெரும்பாலும் ரத்த சோகை ஏற்படுவதற்கு இரும்புச்சத்து குறைபாடு தான் முதல் காரணமாக இருக்கின்றது. அதனால் நீங்கள் முதலில் மருத்துவரை சந்தித்து, ரத்தசோகை வருவதற்கான காரணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்பொழுது தான், நமக்கு மேலே சொன்ன நான்கு முக்கியமான காரணங்களில் எது நம்மை பாதித்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். அந்த பதில் கிடைக்கும் போது, அதற்கான சிகிச்சையை மட்டும் நாம் மேற்கொண்டு விடலாம்.

இன்றைய போட்டி நிறைந்த உலகில், நாம் எத்தனை திறமையாக இருந்தாலும், நம்முடைய உடற்சோர்வு, தலைவலி, உடல்வலி இவற்றால் நம் திறமை வீணாகக் கூடாது. அதற்கு நமது உடலின் மீது நாம் நன்றாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். 

இந்த விழிப்புணர்வு மூலம், நாம் நம்முடைய சோர்விலிருந்து விடுபடலாம். இன்னும் நன்றாக நம்மால் வேலை பார்க்க முடியும். தலைவலி மற்றும் உடல்வலியில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். இனி ரத்த சோகை என்று தெரிந்தாலும், அதை எளிதாக கையாண்டு விடலாம்.

பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு