தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்!
நமது உடல் எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. தண்ணீரில் ஊட்டச்சத்து உள்ளது. இது நமது வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. நமது உடலுக்குள் நடக்கும் பெரும்பாலான ரசாயன எதிர்வினைகளில் நீர் பங்கு வகிக்கிறது. குறிப்பாக வியர்வை, சிறுநீர் மற்றும் சுவாசம் மூலம் நாம் தொடர்ந்து உடலில் இருந்து நீரை வெளியேற்றி வருகிறோம்.

இதனால், போதுமான தண்ணீர் அருந்துவதை உறுதி செய்வது உடலின் சமநிலைக்கு முக்கியம். இதனால், நீரிழப்பு ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.பொதுவாக, ஒவ்வொரு நாளும் அதிகளவு தண்ணீர் குடிப்பது, நல்ல ஆரோக்கியம், அதிக ஆற்றல் மற்றும் சிறந்த சருமத்திற்கான ரகசியம் என்றும் பலரும் கூறுவதை கேட்டிருப்போம்.
அதேசமயம் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தினாலும் அது ஆபத்தாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஒருநாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். சமீபத்திய ஆராய்ச்சியின்படி, ஒருவர் ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் அல்லது சுமார் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இந்தளவு நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைப்பதற்கு போதுமான அளவாகும்.
எனவே, ஒருவர் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 1.5 முதல் 1.8 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அதேசமயம், வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழல்களிலும், அதிக உயரத்திலும் வசிப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், மற்றவர்களை விட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, உடல் தினசரி இழக்கும் திரவத்தை ஈடுசெய்யும் அளவுக்கு தண்ணீர் பருக வேண்டும் என்பதே சரியான அணுகுமுறை என்று கூறப்படுகிறது.
உதாரணமாக, நம் உடலுக்கு குறைந்தது 1.5 லிட்டர் திரவம் நீரிழப்பை தவிர்க்க தினசரி அவசியம் நீர் பருக வேண்டும். இதில் சுமார் 20% நாம் உண்ணும் உணவில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து கிடைக்கும். பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை பொறுத்து இந்த அளவு மாறும். 1.5 லிட்டர் என்பது குறைந்தபட்ச அளவே. அவரவர் உடலமைப்பு, உடல் உழைப்பு, காலநிலை ஆகியவற்றுக்கு ஏற்ப நீர் தேவை மாறுபடும்.
எனவே ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் என்ற கணக்கை மறந்து, உடலின் தேவைக்கு ஏற்ப நீர் பருக வேண்டும். சிறுநீர் தெளிவாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவோ இருந்தால் போதுமானது. அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் கூடுதலாக தண்ணீர் பருக வேண்டும். தாகம் எடுக்கும்போது அதற்கேற்ப தண்ணீர் அருந்துவது நல்லது.
- ரிஷி
|