ரோபோடிக் இதய அறுவைசிகிச்சை!
புதிய தொழில்நுட்பத்தின் மேஜிக்!
இதயமே… இதயமே…ஹெல்த் கைடு!
ரோபோடிக் மற்றும் துடிக்கும் இதய அறுவைசிகிச்சை (Beating Heart Surgery) இந்தியாவில் இதய நோய் சிகிச்சையைப் புதிய தொழில்நுட்பம் மாற்றி அமைத்துள்ளது.இந்தியாவில் கரோனரி தமனி நோய்க்கு சிகிச்சையளிப்பது என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருந்த ஒரு காலம் இருந்தது.  பாரம்பரிய முறைப்படி மார்பைக் கீறி திறந்த இதய அறுவைசிகிச்சையே செய்யப்பட்டது. வாரக் கணக்கில் மருத்துவமனையில் தங்கும் நிலை இருந்ததுடன் முழு குணம் அடைய நீண்ட காலம் தேவைப்பட்டது. இதய அறுவை சிகிச்சையில் உருவாகியிருக்கும் இந்த பரிணாம வளர்ச்சியை நான் அறுவை சிகிச்சை அறையில் இப்போது காண முடிகிறது.  இப்போது, நிலை வேகமாக மாறி வருகிறது. புதிய தலைமுறை அறுவை சிகிச்சை நுட்பங்கள், ரோபோடிக் மற்றும் இதய தமனிகளில் இருக்கும் அடைப்பை, இதயத்தின் துடிப்பை நிறுத்தாமல் அல்லது இதய - நுரையீரல் இயந்திரம் மூலம் இதயத்தை துடிக்க வைத்து மேற்கொள்ளும் துடிக்கும் இதய சிகிச்சை (Beating Heart Surgery) நடைமுறைகள், சிறிய அளவிலேயே அறுவைசிகிச்சைக் கீறல்கள், குறைவான சிக்கல்கள், விரைவான குணம் அடைதல் என பல வகை மருத்துவ முன்னேற்றங்களுடன் இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்க முடிகிறது.
இது இந்தியாவில் இதய பராமரிப்பில் காணப்படும் சிறந்த மாற்றங்களில் ஒன்றாகும். இது வேறெங்கோ தொலைதூரத்தில் இருக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளில் நடப்பது அல்ல. இது இங்கேயே இப்போதும் நடக்கிறது என்பது நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்..
குறைவான துளையிடலுடன் கூடிய பாதுகாப்பான அறுவைசிகிச்சையை நோக்கிய உலகளாவிய மாற்றம்.21,000-க்கும் மேற்பட்ட ரோபோ-உதவி கரோனரி தமனி பைபாஸ் கிராஃப்டிங் (coronary artery bypass grafting -CABG) நடைமுறைகளின் விரிவான உலகளாவிய பகுப்பாய்வு இந்த முன்னேற்றத்திற்கு வலுவான சான்றாக அமைகிறது.
ரோபோ உதவியுடன் செய்யப்படும் குறைந்தபட்ச ஊடுருவல் நேரடி சிஏபிஜி (RA-MIDCAB) மற்றும் முற்றிலும் எண்டோஸ்கோபிக் முறையிலான சிஏபிஜி (TECAB) [robot-assisted minimally invasive direct CABG (RA-MIDCAB) & totally endoscopic CABG (TECAB] ஆகிய இரண்டிலும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய இறப்பு விகிதம் [perioperative mortality] இப்போது 1 சதவீதத்திற்கும் குறைவாகவும், பக்கவாத ஆபத்து 0.7 சதவீதமாகவும் உள்ளது. திறந்த மார்பு செயல்முறையான முழு ஸ்டெர்னோடமிக்கு [full sternotomy-an open-chest procedure] 3.2 சதவீதத்திற்கும் குறைவான பேருக்கு நிகழ்கிறது.
நோயாளிகளுக்கான உறுதி
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இதய தமனி மாற்று அறுவை சிகிச்சையில் வைக்கப்படும் க்ராஃப்ட் செயல்படுவது [graft patency rate] 96 சதவீதமாக உள்ளது. இது உலக அளவில் சிறந்த முடிவுகளுக்கு இணையாக உள்ளது. பெரிய பாதகமான இதய மற்றும் பெருமூளை ரத்த நாள நிகழ்வுகளிலிருந்து விடுபடுவது ரா-மிட்கேப்-க்கு (RA‑MIDCAB) 83 சதவீதமாகவும், டிஇசிஏபி-க்கு (TECAB) 92 சதவீதமாகவும் உள்ளது.
துடிக்கும் -இதய ரோபோடிக் அறுவை சிகிச்சையின் வாக்குறுதி [Beating-Heart Robotic Surgery]
ஆனால் மேற்கூறிய இந்த எண்கள் எல்லாம் ஒரு பகுதியை மட்டுமே கூறுகின்றன. நிஜ உலகில், ஒரு காலத்தில் தீவிர சிகிச்சையில் வாரக் கணக்கில் இருந்த நிலை மாறி, இப்போது சில நாட்களில் வீடு திரும்ப முடிகிறது என்பதே இதன் பொருள். குறைவான தொற்று பாதிப்புகள், குறைவான வலி, குறைவான ரத்த இழப்பு, விரைவாக குடும்ப வாழ்க்கையை மீண்டும் தொடர்தல், பழையபடி வேலைக்கு திரும்புதல் போன்ற முன்னேற்றங்கள் இச்சிகிச்சையின் பலன்களாக இருக்கின்றன.
மிகவும் சக்திவாய்ந்த முன்னேற்றங்களில் ஒன்று முற்றிலும் எண்டோஸ்கோபிக் துடிக்கும் -இதய அறுவை சிகிச்சையின் [endoscopic beating-heart surgery] வளர்ச்சியாகும். அதிநவீன ரோபோடிக் நிலைப்படுத்திகள், மேம்பட்ட இமேஜிங், துல்லியமான எண்டோஸ்கோபிக் கருவிகள் [sophisticated robotic stabilisers, advanced imaging, precision endoscopic tools] மூலமாக, இதயம் தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும் போதே இதய-நுரையீரல் இயந்திரத்தைப் [heart-lung machine] பயன்படுத்தாமல் சிக்கலான பைபாஸ் சிகிச்சைகளை இப்போது நாம் செய்ய முடியும். இது வீக்கம் மற்றும் நரம்பியல் ஆபத்தை குறைக்கிறது. வயதான நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த செயல்முறை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
ரோபோடிக் இதய சிகிச்சை கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் முன்னணி நிலை
இந்தியா இந்தத் துறையில் மருத்துவ முன்னேற்றங்களை வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கும் ஒரு பார்வையாளர் அல்ல. இந்தியா இந்த மருத்துவ மேம்பாடுகளை வழிநடத்த உதவி வருகிறது. செப்டம்பர் 2023-ல், நாட்டின் முதல் துடிக்கும்-இதய ரோபோடிக் சிஏபிஜி, இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ரோபோடிக் அமைப்பைப் பயன்படுத்தி செய்யப்பட்டது.
அப்போதிருந்து, 750 டிஇசிஏபி (TECAB)-கள் உட்பட, 1,400-க்கும் மேற்பட்ட ரோபோடிக் கார்டியோதோராசிக் மருத்துவ நடைமுறைகள் முன்னணி மருத்துவர்களை கொண்ட குழுக்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மார்ச் 2025-ல், மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்: இந்தியாவில் முதல் ரோபோடிக் கார்டியாக் தொலை அறுவை சிகிச்சைகள் (robotic cardiac telesurgeries) 286 கிலோமீட்டர் தூரத்தில் செய்யப்பட்டது. உள் மார்பக தமனி அறுவடை மற்றும் துடிக்கும்-இதய டிஇசிஏபி போன்ற சிக்கலான நடைமுறைகள் தொலைதூரத்தில் நடத்தப்பட்டன. 40 மில்லி வினாடிகள் கால அளவிலான முறையுடன் இவை செய்யப்பட்டன.
இது ஏன் முக்கியம்: நோயாளிகள், சுகாதாரத் துறைக்கு நன்மைகள்
இந்தியா போன்ற மிகப்பெரும் நாட்டிற்கு, இந்த சிகிச்சை முறை உண்மையில் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சிறந்த மையங்களிலிருந்து நிபுணத்துவத்தைப் பெற முடிகிறது.ரோபோடிக் இதய அறுவைசிகிச்சை முறையான நன்மைகளையும் தருகிறது.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு குறுகிய காலமே தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) தங்குதல், குறைந்த ரத்தமாற்றத் தேவைகள் மற்றும் விரைவான குணம் அடைதல் ஆகியவை மருத்துவமனைகளின் சுமையைக் குறைக்கின்றன. அத்துடன் காலப்போக்கில் நோயாளிக்கு ஆகும் மருத்துவ செலவுகளையும் குறைக்கும். உள்நாட்டு ரோபோடிக் சிகிச்சை முறைகள் மிகவும் குறைந்த கட்டணங்களில் சாத்தியமாகும்போது, இந்த வகையான மேம்பட்ட பராமரிப்பு பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமில்லாமல், தொலை தூரங்களில் உள்ள சிறிய நகரங்களிலும் எளிதில் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும்.
மறுபக்கம், சில சவால்களும் நம் எதிரே உள்ளன. ரோபோடிக் அறுவை சிகிச்சை முறைகளுக்கு குறிப்பிடத்தக்க முதலீடு மற்றும் மிகவும் மேம்பட்ட பராமரிப்பு தேவை. அதேபோல், இதில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களைப் பற்றி அறுவை சிகிச்சை நிபுணர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள தொடர்ந்து கற்பது அவசியம்.
சிகிச்சைக்குப் பின் விரைவில் குணமடைந்து நல்ல பலன்களை பெற தொடர்ச்சியான பராமரிப்பு அனுபவம் தேவைப்படுகிறது. புதிதாக தயாரிக்கப்பட்ட கருவிகளை பரவலாக ஏற்றுக்கொண்டு அவற்றை இலகுவாக கையாள, நிபுணர்களுக்கு நேரமும் பயிற்சியும் தேவைப்படும். ஆயினும் இச்சிகிச்சை அளிக்கும் மருத்துவ பலன்களை அப்படியே ஓரங்கட்டி வைத்துவிட முடியாது. வயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் உட்பட அதிக அறுவை சிகிச்சை ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு, துடிக்கும் இதய ரோபோடிக் சிஏபிஜி ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான தீர்வை வழங்குகிறது. மேலும் இந்தியாவின் சுகாதார சூழலுக்கு, அதிக செயல்திறனுடன் சிறந்த விளைவுகளை வழங்குவதற்கான வாய்ப்பையும் இது பிரதிபலிக்கிறது.
முன்னோக்கிய பாதை: புதுமையிலிருந்து அன்றாட நடைமுறை வரை
துடிக்கும் இதய அறுவைசிகிச்சை ஒரு காலத்தில் சோதனை அடிப்படையிலான தொழில்நுட்பமாகக் கருதப்பட்டது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே முன்னணி மருத்துவ மையங்களில் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ நடைமுறையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
இந்திய மருத்துவக் குழுக்கள் இப்போது உலகளாவிய உயர் தரநிலைகளுடன், எல்லைகளைத் தாண்டி தொலை அறுவைசிகிச்சை போன்ற நடைமுறைகளைச் செய்து சாதித்து வருகின்றன. இந்த முன்னேற்றங்கள் அறுவை சிகிச்சை அரங்கிலும் அதற்கு அப்பாலும் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகின்றன என்பதைக் காண முடிகிறது. இதய அறுவை சிகிச்சையில் ஒரு அமைதியான புரட்சியை நாம் காண்கிறோம். இது இந்தியா முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு பாதுகாப்பான, வேகமான மற்றும் மனிதாபிமானம் மிக்க மருத்துவ கவனிப்பிற்கான வாக்குறுதியை வழங்குகிறது.
இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது
|