கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை…
காலத்தில் செய்வோம்!
சென்ற இதழில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் காண்போம். இனி கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை யாருக்குப் பொருத்தப்படுகிறது என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

உயிருடன் வாழும் நன்கொடையாளர் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் (living donor liver transplantation (LDLT)), பொதுவாக பெரியவர்களுக்கு அவர்களது வலதுப்புற பகுதி [right lobe] மட்டும் உறுப்பு மாற்றாக பொருத்தப்படுகிறது. இந்த மருத்துவ நடைமுறை முழுவதுமாக முடிவடைய 8 முதல் 12 மணிநேரம் வரை ஆகலாம்.
மேலும் இம்முறையில் நோயுற்ற கல்லீரலை அகற்றுதல், பின்னர் அதை மிகக் கவனமாக பிரித்தெடுத்தல் மற்றும் முக்கிய இரத்த நாளங்கள் மற்றும் பித்தநாளங்களை மறுகட்டமைத்தல் [hepatectomy, careful dissection, reconstruction of the major blood vessels, bile ducts] ஆகிய மருத்துவ நடைமுறைகள் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன. தேவைப்படுகின்றன. அறுவைசிகிச்சைக்குப் பின் குணமடைய எவ்வளவு காலம் பிடிக்கும்?
அறுவைசிகிச்சைக்குப் பிறகு, நோயாளிகள் பல நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்படுகிறார்கள். இதைத் தொடர்ந்து நோயாளிகள் பொதுவாக 2 முதல் 3 வாரங்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும்.
இதையடுத்து, நோயாளியின் உடல் பொருத்தப்பட்ட உறுப்பை நிராகரிப்பதைத் தடுக்க உதவும் நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை [immunosuppressive medications] மருத்துவர்கள் கொடுக்கத் தொடங்குவார்கள். மேலும் தேர்ச்சிபெற்ற மருத்துவக் குழு தொற்று அல்லது இதர சிக்கல்களின் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என நோயாளிகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும். உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும்?
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்த நோயாளிகள் நோயெதிர்ப்புத் தடுப்பு சிகிச்சையுடன் வாழ்க்கையைத் தொடர்வது அவசியம். இந்த மருந்துகள் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் மாற்று உறுப்பை உடல் நிராகரிப்பதைத் தடுக்க உதவினாலும், அவை நோயாளிகளை தொற்றுநோய்களுக்கு ஆளாக்குகின்றன. இதனால் நோயாளிகள் தொடர்ந்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியம்.
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையின் வெற்றி விகிதங்களில் இந்தியா குறிப்பிட்டு சொல்லுமளவிலான முன்னேற்றத்தை எட்டியிருக்கிறது:
*ஒரு வருட உயிர்வாழ்வு விகிதங்கள் [One-year survival rates]: பெரியவர்களில் 85%, குழந்தை நோயாளிகளில் 95% வரை ஆகும்.
*ஐந்து வருடங்களுக்கும் அதிகமாக பத்து வருடங்கள் உயிர்வாழ்வு விகிதங்கள் [Five- and ten-year survival]: சிறந்த நோயெதிர்ப்புத் தடுப்பு, தொற்று கட்டுப்பாடு மற்றும் நோயாளிகளிடையே அறுவைசிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு கல்வி எடுத்துரைக்கப்படுவது காரணமாக தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பிறகு, குறிப்பிட்ட காலங்களில் தொடர்ந்து பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், 80%-க்கும் மேற்பட்டவர்கள் வேலை, பயணம் மற்றும் குடும்பப் பொறுப்புகள் உட்பட தங்களது அன்றாட வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள் என்பதையும் அப்போலோவின் மாற்று உறுப்பு அறுவைசிகிச்சை பதிவேடு காட்டுகிறது.
உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் வழக்கமாக மருத்துவமனையில் ஒரு வாரம் செலவிடுகிறார்கள். மேலும் 3-4 வாரங்களுக்குள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றும் பழக்கவழக்கங்களுக்குத் திரும்ப முடியும். நன்கு பரிசோதிக்கப்பட்ட உடல் உறுப்பு நன்கொடையாளர்கள், நீண்டகால எதிர்மறையான உடல்நல பாதிப்புகளை அனுபவிப்பதில்லை என்பதை ஆராய்ச்சி முடிவுகள் தொடர்ந்து காட்டுகின்றன.
வராமல் தடுப்பது என்பது எந்தளவிற்கு முக்கியம்?
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையின் வெற்றி பரவலாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்கும் சம அளவு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மதுசாரமற்ற கொழுப்பு கல்லீரல் நோயின் அதாவது ஆல்கஹால் அல்லாமல் உண்டாகும் கொழுப்பு கல்லீரல் நோய் (non-alcoholic fatty liver disease (NAFLD))-ன் தாக்கம் தற்போது மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
இது பெரிய விளைவுகளை வெளிக்காட்டாமல் மிக அமைதியாக, மிக தீவிரமாக கல்லீரல் பாதிப்பை உருவாக்குகிறது. இதனால் மதுசாரமற்ற கொழுப்பு கல்லீரல் நோய் இன்று ஒரு சவாலாகி இருக்கிறது.
NAFLD-ஐ பொறுத்தவரையில், வழக்கமான அல்ட்ராசவுண்ட் பரிசோதனை அதனை முன்கூட்டியே அடையாளம் காண உதவுகிறது. அடுத்து எடை மேலாண்மை, மது அருந்தும் பழக்கத்தை குறைத்தல் மற்றும் எதிர்காலத்தில் நோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதில் அவசியமான தடுப்பூசிகள் போன்ற நம்முடைய அன்றாட வாழ்க்கை முறை மாற்றங்களால் இப்பிரச்சினையை சமாளிக்க முடியும். மொத்தத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது…
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை, தீவிரமான கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், நவீன மருத்துவத்தின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகவும் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை குழுவின் நிபுணத்துவம் மற்றும் அதிகரித்து வரும் உயிர் வாழும் நன்கொடையாளர்களின் எண்ணிக்கை இவை இரண்டினால், உயிர்காக்கும் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகளை மேற்கொள்வதில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
நவீன ஆராய்ச்சி மற்றும் மிகச் சிறப்பான நோயாளி பராமரிப்பு மூலம் நேர்மறையான சிகிச்சை பலன்களை நாம் பெறுகிறோம். இதனால் இந்தியாவில் இப்போது உலகத்தரம் வாய்ந்த உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எப்போதும் போலவே, நோய் தடுப்பு மற்றும் உடனடி சிகிச்சை இந்த இரண்டும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப முக்கியம். சரியான சிகிச்சை மற்றும் நிபுணர்களின் ஆலோசனை இவை இரண்டும் இணையும் போது, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை ஒரு மருத்துவ நடைமுறை என்பதையும் தாண்டி, வாழ்வை நீட்டிக்கும் வாய்ப்பை அளிக்கிறது. இதைதான் ஆங்கிலத்தில் “By transplanting livers we can transform lives” என்று சொல்கிறார்கள்.
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் இளங்குமரன். கே
|