சிங்கப் பெண்ணே... சிங்கப் பெண்ணே...
செவ்விது செவ்விது பெண்மை!
மனதின் நுண்ணிய கோடுகளைத் தாண்டி, சமூகத்தின் எதிர்பார்ப்புகள், உணர்வுகளின் உயர்நிலையிலும், உறவுகளின் அகழ்களிலும் அவள் ஒரு தேடலில் இருக்கிறாள். தன் அடையாளத்தையும், தன் வாழ்வின் உண்மை நோக்கத்தையும் காண விழைகிறாள்.  25 முதல் 30 வயது என்பது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் நெகிழ்வுகளால் நிரம்பிய ஒரு பருவமாகும். தொழில்முனைவோ, குடும்ப கட்டமைப்போ, உறவுகளோ, தாய்மையோ என பல சூழ்நிலைகளில் பெண்கள் தங்களை அடையாளம் காண முயற்சி செய்கின்றனர். இத்தகைய பருவத்தில் ஏற்படும் உளவியல் குழப்பங்களை ஹர்லாக் (Hurlock) தனது வளர்ச்சி உளவியல் (Developmental psychology) கருத்துக்களில் விளக்குகிறார். இங்கு அவற்றின் விளக்கங்களோடு, நம்மில் பலர் எதிர்கொள்கின்ற உணர்வுகளுக்கும் விடைகளைப் பார்ப்போம்.
வாழ்க்கை சமநிலையை அடைய முடியுமா?
“நான் என் தொழிலையும் குடும்பத்தையும் சமநிலையாக்க முடியுமா?” என்பது இளம் பெண்களில் பொதுவான கேள்வி. ஹர்லாக் (Hurlock) இளமைப் பருவத்தை வாழ்க்கை நோக்கங்களை உருவாக்கும் கட்டமாகக் குறிப்பிடுகிறார். தொழிலில் உயர்ச்சி, குடும்ப உறவுகள் ஆகிய இரண்டையும் சமநிலையாக்க சிறந்த திட்டமிடல், பொறுப்புகளை பகிர்ந்து செயல்படுதல் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை முக்கிய கருவிகளாக அமைகின்றன.
உடல் தோற்ற குழப்பம்
இப்பருவத்தில் பெண்கள் “என் தோற்றம் சரியா?” என எண்ணுவதும், சமூக ஒப்பீடுகளால் மன அழுத்தத்துக்கு உள்ளாகுவதும் இயல்பானது. சமூக ஊடகங்கள், அழகுப் பிரதிபலிப்புகள் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கின்றன. ஆனால், உங்கள் தனித்துவத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் மதிப்பது முக்கியமானது. வெளி அழகைவிட உள் நலத்தையே முக்கியமாகக் கருதுங்கள்.
உறவுகளில் நெருக்கம் உருவாக்க முடியவில்லையா?
“நிரந்தர உறவுகள் ஏன் உருவாகவில்லை?” எனும் கேள்வி சில சமயம் தனிமையை உணரவைக்கிறது. ஹர்லாக் (Hurlock) இதை அந்தரங்கம் Vs தனிமைப்படுதல் (Intimacy vs Isolation) என்ற ஆழமான உளவியல் கட்டமாக விவரிக்கிறார். உண்மையான உறவுகள் நம்பிக்கை, நேரம் மற்றும் உணர்வுப் புரிதலால் உருவாகின்றன. உறவுகளை வளர்க்க நம்மை நாமே அறிந்துகொள்ளவும், வெளிப்படையாக உரையாடவும் பழக வேண்டும்.
பாலியல் உணர்வுகளும் சிக்கலும்
“என் பாலியல் உணர்வுகள் நியாயமா?” என்ற சந்தேகங்கள் இப்பருவத்தில் உண்டாகும். பாலியல் (sex) என்பது இன்றுவரை பேசக்கூடாத, “கூறக் கூடாத” விஷயமாகவே கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள், “சீர்மை”, “மரியாதை” போன்ற சொற்களுக்குள் கட்டுப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் பற்றி கேட்பதும், பேசுவதும் கூட தவறாகவே பார்க்கப்படுகிறது. ஹர்லாக் மற்றும் பல உளவியல் அறிஞர்கள் கூறுவதுபோல், இளமை பருவத்தில் இந்த உணர்வுகள் உருவாகுவது மற்றும் அது குறித்து சந்தேகங்கள் ஏற்படுவது மிகவும் சாதாரணமானது. உண்மையில், பாலியல் உணர்வுகளை புரிந்துகொள்வதும், அவை குறித்து பாதுகாப்பான மற்றும் திறந்த உரையாடலில் ஈடுபடுவதும் மிகவும் முக்கியம். “பாலியல்” என்பது தவறு அல்ல; அது ஒரு வாழ்வியல் உண்மை. தாய்மையின் அழுத்தம்
“தாயாக மாற முடியாமலிருப்பது ஏன் வலிக்கிறது?” எனும் உணர்வு சிலருக்கு ஏற்படலாம். சமூகத்தில் இருந்து வரும் அழுத்தங்கள், எதிர்பார்ப்புகள் காரணமாக இது பெரிதாகவே தெரிகிறது. ஆனால் ஹர்லாக் கூறுவது போல, தாய்மை ஒரு கட்டாயத்தால் வரக்கூடிய ஒன்றல்ல. அது ஒரு தேர்வாக இருக்க வேண்டும். இன்றைய சூழலில் கல்யாணம் முடிந்த மூன்று மாதங்களில் இருந்தே நல்ல செய்தி இல்லையா? என்ற கேள்வி எல்லா புதுமண தம்பதிகளிடமும் கேட்கப்படுகிறது.
சமுதாயத்திலிருந்து வரும் இத்தைகைய கேள்விகளுக்கு அஞ்சியே பல தம்பதிகள் திருமணம் முடிந்த மூன்று மாதங்களில் கருவுறுதல் சிகிச்சை மையங்களுக்குச் சென்று செயற்கை கருவுறுதல் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் கருவுறுதலில் பிரச்சனை என்பது ஒரு ஆணும் பெண்ணும் எந்த ஒரு கருத்தடை முறைகளையும் பயன்படுத்தாமல் ஒரு வருட உடலுறவுக்கு பின்பும் குழந்தை இல்லை என்றால் மட்டுமே கருவுறுதலில் பிரச்னை (infertility) எனப்படுகிறது. எனவே, உங்கள் உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் முதன்மை கொடுங்கள்.
பிறப்புக்குப் பிறகு மனநிலை மாற்றம்
“பிரசவத்துக்குப் பிறகு என் மனநிலை ஏன் மாறிவிட்டது?” என்பது போஸ்ட்பார்டம் டிப்ரஷன் (Postpartum depression) எனப்படும் மனநல சிக்கலைக் குறிக்கலாம். இது பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் ஒரு நிலை. மனவேதனை, குறைதிருப்பு, பயம் ஆகியவை தோன்றலாம். உங்களை தனியாக உணர வேண்டியதில்லை. உடனடி உளவியல் உதவி தேடுவதில் தவறில்லை.
அடையாள மாற்றம் - புதிய நிலைக்கு மாறும் பயணம்
தாயாக மாறிய பிறகு “நான் பழைய நானாக இல்லை” என்ற உணர்வு இயல்பானது. ஹர்லாக் கூறுவதுபோல், இளம் பெண்கள் புதிய பங்குகளை ஏற்கும் போது பழைய அடையாளங்களைத் துறந்து புதியதைக் கட்டமைக்கின்றனர். இது தற்காலிக குழப்பமாக இருந்தாலும், புதிய சுயநல வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.
சமூக அழுத்தங்களை சமாளிக்க...
“சமூகம் என்னிடம் எதிர்பார்ப்பது என்ன? அதற்கேற்ப நான் வாழ முடியுமா?” இவ்வாறான கேள்விகள் மன அழுத்தங்களை உருவாக்கலாம். உங்கள் ஆசைகள், கனவுகள், சமூக எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் இடையே சமநிலையை உருவாக்கத் தெரிந்துகொள்வது முக்கியம். உங்கள் மதிப்பு உங்கள் உள்ளுணர்வால் நிர்ணயிக்கப்பட வேண்டும், பிறரால் அல்ல.
சோர்வு, பயம், கவலை
அடிக்கடி சோர்வாகவும், கவலையாகவும், பயமாகவும் இருக்கிறதா? இது மனநலக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம். Hurlock இளமைப் பருவத்தை இந்த வகையான சிக்கல்கள் முதன்முறையாக வெளிப்படும் பருவமாகக் குறிப்பிடுகிறார். உளவியல் ஆலோசனை, தியானம், உறுதிமொழிகள் போன்றவை இதனை சமாளிக்க உதவும்.
தனிமை உணர்வு
தனிமையை உணர்வது இப்பருவத்தில் பொதுவானது. நண்பர்கள் குறைவாக இருக்கலாம், பேசுவதற்கோ பகிர்வதற்கோ ஒருவர் தேவைப்படலாம். நெருக்கமான உறவுகளை வளர்ப்பதும், உங்கள் உணர்வுகளைப் பகிர்வதும் முக்கியம்.
நிதி சுயாதீனம்: “நிதி பிரச்னை என் மனதை ஏன் பாதிக்கிறது?” நிதி சுயாதீனம் என்பது ஒரு பெரிய நம்பிக்கையை வழங்கும் கருவி. பண மேலாண்மை அறிவு, செலவுகளை திட்டமிடல் ஆகியவை உங்கள் நம்பிக்கையையும் மனநலத்தையும் மேம்படுத்தும்.
வாழ்க்கை நோக்கம் - தேடல் ஒரு பயணம்
“என் வாழ்க்கையின் நோக்கம் என்ன?” என்ற கேள்வி இளமைப் பருவத்தில் பெரும்பாலானோர் கேட்பது இயல்பானது. ஹர்லாக் இப்பருவத்தை “தன்னைத் தேடும் பயணம்” எனக் கூறுகிறார். இது குழப்பமல்ல, ஒரு தேடல். உங்கள் விடைகள் உங்கள் அனுபவங்களிலும், சுயபரிசீலனையிலும்தான் கிடைக்கும்.
மனநலம் உங்கள் கையில் இளமை பருவத்தில் உளவியல் குழப்பங்கள் இயல்பானவை. Hurlock கூறுவது போல, சமூக ஆதரவு, திறந்த உரையாடல், உறவுப் புரிதல் மற்றும் உளவியல் ஆலோசனைகள் இளம் பெண்கள் தங்களது மனநலத்தை மேம்படுத்தும் வழிகளாக அமைகின்றன. தங்களை நம்புங்கள் - உங்கள் பயணம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
- காயத்ரி (மனநல ஆலோசகர்)
மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி
|