ரோஷினி ஹரிப்பிரியன் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!



தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். 
இந்தத்தொடரின் மூலம் இல்லதரசிகளின் இதயம் வருடிய செல்ல கண்ணம்மாவாகவே வாழ்ந்தவர் இவர். ரோஷினி திரையுலகிற்கு வருவதற்கு முன்பு மாடலாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது இவர், பெரியத்திரை நாயகியாக வலம் வருகிறார். 

கடந்த ஆண்டு துரை செந்தில் குமார் இயக்கிய கருடன் திரைப்படத்தின் மூலம் பெரியதிரையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான மெட்ராஸ் மேட்டினி திரைப்படத்தில் நடித்துள்ளார். ரோஷினி தனது ஃபிட்னெஸ் ரகசியத்தை பகிர்ந்து கொள்கிறார்.

ஒர்க்கவுட்ஸ்: உடற்பயிற்சி என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை இப்போதுதான் உணர்கிறேன். நான் மாடலிங் துறையில் வந்ததில் இருந்தே உடற்பயிற்சிகள் தொடங்கிவிட்டேன்.

நடிகையான பிறகு, ஒரு ஜிம் போய் முறையாக பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக ஜிம்கள் பலவற்றை தேடித் தேடி எடுத்து அங்கு பயிற்சியை தொடங்குவேன். ஒரு மாசம் போவேன். பின்னர், ஏதோ காரணத்தினால் விட்டுவிடுவேன்.

ஆனால், இப்போது நான் பயிற்சி எடுக்கும் ஜிம்மிற்கு வந்தபிறகுதான் ஒரு தெளிவு கிடைத்தது. எனது டிரைனரும் நன்கு பயிற்சியளிக்கிறார். ஒரு மாதத்திலேயே என் உடலில் நல்ல மாற்றத்தை உணர்ந்தேன். அதைத்தொடர்ந்து, அடுத்து என்ன பயிற்சி, அடுத்து என்ன பயிற்சி என எனக்கே ஒரு ஆர்வம் தொற்றிக் கொண்டது. அதிலிருந்து கடந்த ஒரு வருடமாக இந்த ஜிம்மில் பயிற்சி எடுத்து வருகிறேன்.

 பொதுவாக, உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி செய்கிறார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உடலை வடிவாக வைத்திருப்பதைவிட ஆரோக்கியம் மிக முக்கியம். அதற்கு உடற்பயிற்சி மிக முக்கியமானது. அதுபோன்று பெரிய ஜிம் என்று தேடித் தேடி பல கிலோ மீட்டர் தள்ளி உள்ள ஜிம்மில் போய் சிலர் சேருவார்கள். ஆனால், நாளடைவில் போய், வருகிற அலுப்பிலேயே ஜிம் போவதை நிறுத்திவிடுவார்கள்.

அதனால் நாம் தேர்ந்தெடுக்கும் ஜிம் நமது வீட்டில் இருந்து ஒரு மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அடுத்து டிரைனர் மிக முக்கியம். ஒரு மோட்டிவேட்டான டிரைனர் கிடைத்தாலே நமது பயிற்சிகள் சுலபமாக அமைந்துவிடும்.

பொதுவாக நான் அனைத்து வகையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கிறேன். எடை தூக்குதல், ட்ரெட்மில்லில் ஓடுதல், பெஞ்ச் பிரஸ்கள், டெட்லிஃப்ட்ஸ், ஸ்குவாட்ஸ், தோள்பட்டை பிரஸ்கள் மற்றும் புல்-அப்ஸ் - புஷ் அப்ஸ், டம்பெல்ஸ், ரெசிஸ்டன்ஸ் பேன்ட்ஸ், கோர் பயிற்சிகள் உள்ளிட்டவை இருக்கும். அதேசமயம் இந்த பயிற்சிகளை தொடங்குவதற்கு முன்பு வார்ம் அப் மிகவும் முக்கியம். இது தசைகளை நெகிழ்வாக்கவும், பணித்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.

அதுபோன்று, உடற்பயிற்சியை தாண்டி எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் யோகா. அது மனம் மற்றும் உடல் நலனை பாதுகாப்பதற்காக செய்கிறேன். தினமும் 45 நிமிடம் யோகா பயிற்சி மேற்கொள்வேன்.

டயட்: எனக்கு டயட்டே பிடிக்காது. என்னை பொருத்தவரை பிடிச்சதை சாப்பிட வேண்டும். அதுவும் தோன்றும் நேரத்தில் சாப்பிட்டுவிட வேண்டும் அவ்வளவுதான். அதனால், நான் உணவில் கட்டுப்பாடு வைப்பதில்லை. பிடித்ததை சாப்பிட்டு விடுவேன். மறுநாள் ஜிம்போகும்போது டிரைனரிடம் சொல்லிவிடுவேன். அவர் அதற்கேற்றாற் போல் பயிற்சிகளை கொஞ்சம் கூடுதல் ஆக்கிவிடுவார்.

எனவே, உணவு விஷயத்தில் நான் எந்த சமரசமும் செய்வதில்லை. அதேசமயம் ஒரு சமச்சீரான உணவைப் பின்பற்றுவதும் மிகவும் முக்கியமானது. ஒரு நல்ல சமச்சீரான உணவு உடலுக்கு வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம், புரதம், நார்ச்சத்து மற்றும் தினசரி செயல்பாடுகளைச் செய்யத் தேவையான பிற ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது நோயற்ற உடலை ஊக்குவிக்கிறது மற்றும் உடல் திறம்பட செயல்பட உதவுகிறது.

அதுபோன்று ஒவ்வொருவருக்கும் ஒரு உடலமைப்பு இருக்கும். சிலருக்கு தண்ணீர் தேவை அதிகம் இருக்கும். சிலருக்கு சர்க்கரை நோய் இருக்கும், சிலருக்கு தைராய்ட் இருக்கும். அதனால், அவரவர் உடலுக்கு தகுந்தவாறு டயட் பிளானை தகுந்த டயட்டீஷியன், டாக்டர் அல்லது டிரைனர் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

என் உடலமைப்பு என்னவென்று எனக்குத் தெரியும். அதனால் அதற்கேற்றவாறு நான் டயட் பிளான் வெச்சிருக்கேன். அதனால் மற்றவர்களுக்கு டயட் பற்றி அறிவுரை சொல்லமாட்டேன். அதேசமயம், பொதுவாக உணவில் வெள்ளை சர்க்கரை அதிகம் சேர்ப்பதை தவிர்த்தாலே நல்ல மாற்றத்தை உணரலாம்.

அதுபோன்று, மிக முக்கியமானது உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது. எனவே, நிறைய தண்ணீர் குடிக்கிறேன். பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கிறேன். எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட் உணவுகளை தவிர்த்துவிடுவேன். ஏனென்றால் நமது சருமம்தான் நமது உடலின் பிரதிபலிப்பு, அதை நன்றாக பராமரிப்பது நமது கடமையாகும்.

- ஸ்ரீதேவி குமரேசன்