சிறகு முளைத்த சிட்டுக் குருவி…
டீன் ஏஜ் மகள்களைக் கையாள்வது எப்படி?
டீன் ஏஜ் பெண்கள் உற்சாகமானவர்கள் மற்றும் வலிமையானவர்கள். வளர் இளம்பருவப் பெண்கள் உடல் ரீதியாக மாற்றம் அடைவதுடன் மனரீதியான மாற்றங்களையும் சந்திக்கிறார்கள்.  இதனால் குழந்தைப் பருவத்தை கடந்து இளம் பருவத்தை அடையும்போது பல்வேறு உளவியல் மாற்றங்கள் நடைபெறுகிறது. இதனால் பெற்றோர் தன் குழந்தையைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். உடல் மாற்றங்கள்
சிறுமிகளுக்குப் பருவமடைதல் 11-13 வயதில் தொடங்குகிறது. பிறகு, 14 முதல் 16 வயதுக்குள் உடல் வளர்ச்சி முழுமை அடைகிறது. குழந்தைகள் தங்கள் உடலைப் பற்றி எவ்வளவு அதிகமாகப் புரிந்துகொள்கிறார்களோ, அவ்வளவு சிறப்பாக அவர்களால் டீன் ஏஜ் பருவத்தை எதிர்கொள்ள முடியும்.டீன் ஏஜ் பருவம்தான் வளர்ச்சி அதிகமாக உள்ள காலகட்டமாகும்.
அதனால் அவர்கள் ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. புரதச்சத்து அதிகம் உள்ள பருப்பு வகைகள் மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றை அவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சுண்ணாம்பு சத்து நிறைந்த பால், தயிர், சீஸ், மீன்கள் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். பீட்சா, பர்கர், குளிர்பானங்கள் போன்ற துரித உணவுகளைத் தவிர்த்து காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, சியா போன்ற விதைகளைக் கொடுக்கலாம். பருவமடைதலின்போது உடல் வளர்ச்சியால் மாற்றம் (உயரம் அதிகமாதல், எடை கூடுதல்) தோற்றத்தில் ஏற்படும் புதிய மாற்றங்கள் அவர்களுக்குப் புதியதாக இருக்கின்றன.
அதைப்பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு மிகவும் அவசியம். மாதவிடாய் (Periods) பற்றி அவர்கள் புரிந்துகொள்ளும்படி எடுத்து உரைப்பது அவசியம். மாதவிடாய் காலங்களில் அவர்கள் தங்களைப் பராமரிப்பது பற்றியும் மாதவிடாய் காலப் பராமரிப்புப் பொருட்களைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். வயிற்று வலி போன்ற மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உடல் உபாதைகள்பற்றியும் அதற்கான மருந்துகள் பற்றியும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மனநிலை மாற்றங்கள்
இளம்பருவத்தில் பெரியவர்களைப் போல தோற்றத்தில் தெரிந்தாலும் அவர்கள் மனதளவில் குழந்தைகளே. அவர்களின் முடிவெடுக்கும் திறன் 20 வயதில்தான் முழுமை பெறுகிறது மற்றும் இந்தப் பருவத்தில் மனநிலை அடிக்கடி மாறுவது (mood swings) இயல்பானது. டீன் ஏஜ் பெண்கள் தங்களின் தனித்தன்மையை உணர்த்த விரும்புவார்கள்.
குழந்தையாக இருக்கும்போது பெற்றோர் சொல்வதை அவ்வாறே கடைபிடித்து வந்தவர்கள், இந்த வயதில் உணவு, பொழுதுபோக்கு, நண்பர்கள் ஆகியவற்றில் தன்னுடைய முடிவை நிலைநிறுத்த முயற்சிப்பார்கள். இந்த சமயத்தில், தன் மகள் தான் சொல்கின்ற எல்லாவற்றையும் கேட்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதை விடுத்து அவர்கள் முடிவு சரியானது தானா என்பதை பெற்றோர்கள் கவனித்து வழி நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.
எப்போதும் அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களின் மனநிலை, அவர்களுக்கு பிடித்த விஷயங்களை தெரிந்துகொள்வது, ஓய்வு நேரங்களில் அவர்களுடன் விளையாடுவது, சினிமா செல்வது, பொது விஷயங்களை பற்றி கலந்துரையாடுவது, தற்போது தன் மகளை ஒத்த குழந்தைகளுக்கு சமூகத்தில் இருக்கும் அபாயங்கள் பற்றி விவாதிப்பது போன்றவை அவர்களுக்கு பெற்றோருடன் நல்ல இணக்கத்தையும், தன்னம்பிக்கையும், தன்னை சரியாக வழி நடத்த எப்போதும் பெற்றோரை நாடக்கூடிய வாய்ப்பையும் வழங்கும்.
உங்கள் மகளின் நட்பு வட்டத்தை நன்கு அறிந்து வைத்திருங்கள். டீன் ஏஜ் குழந்தைகள் அதிக நேரம் நண்பர்களுடன் செலவிடுவது இயல்பான ஒன்றாகும். நல்ல நட்பு வட்டம் உங்கள் குழந்தையை நல்ல வழியில் நடத்த உதவும். உங்கள் குழந்தையின் நண்பர்கள் நடத்தையில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருப்பின், உங்கள் டீன் ஏஜ் பெண்ணிடம் அதை பக்குவமாக எடுத்துரைத்து நல்ல நண்பர்கள் வட்டத்தில் இணைய உதவ வேண்டும்.
டீன் ஏஜ் பெண்களை கையாள்வது எப்படி?
1.உங்கள் மகளின் சிக்கலான நடத்தையை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
2.அவர்களுக்கான தெளிவான வரைமுறைகள் அவர்களுடன் கலந்து பேசி நிர்ணயித்திடுங்கள்.
3.எப்போதும் உங்கள் குழந்தையுடன் தொடர்பில் இருங்கள். அவர்கள் சொல்வதை கவனமாகக் கேட்டு அவர்களை வழிநடத்துங்கள்.
4.பெற்றோரின் புரிதலும் இரக்கமும் (kindness) டீன் ஏஜ் பெண்களை தங்கள் பெற்றோரின் வழிநடத்துதலை ஏற்க உதவும்.
5.அவர்கள் செய்யும் சிறப்பான விஷயங்களை மனம் திறந்து பாராட்டுங்கள்.
6.அவர்கள் கல்வியில், விளையாட்டிலும் மற்றும் அவர்கள் சிறந்து விளங்கும் துறையிலும் சாதிக்க உறுதுணையாக இருங்கள்.
7.அவர்களுக்கான ஆபத்தில்லாத சிறிய சிறிய சுதந்திரங்களை பெற்றோர்கள் கொடுக்கலாம். நான் சொல்வதை மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற கடினமான போக்கை கையாளாதீர்கள்.
இன்றைய காலகட்டத்தில் டீன் ஏஜ் பெண்கள் அதிக சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். பெற்றோர் சொல்வதை அவர்கள் கவனிக்கத் தவறுவது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடியதாக உள்ளது. டீன் ஏஜ் பிள்ளைகள் பெற்றோரிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை
1.பெற்றோரை மதியுங்கள். அவர்கள் உங்களுக்கு செய்ய வேண்டியது கடமை என்று நினைக்காமல் அவர்களுக்கு நன்றியுடன் இருங்கள்.
2.பெற்றோரின் கருத்தை மதித்து, அவர்கள் பார்வையில் இருந்து விஷயங்களை பார்க்க தெரிந்து கொள்ளுங்கள்.
3.பரஸ்பர மரியாதைக்குரிய உறவை உருவாக்க வேண்டியது உங்கள் நலனுக்கு மிகவும் அவசியம்.
4.உங்கள் பெற்றோரின் அனுபவம் மற்றும் அறிவுரையிலிருந்து வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
5.பெற்றோரின் அன்பை புரிந்துகொள்ளுங்கள். பெற்றோருக்குத் தெரியாமல் செய்யும் எந்த ஒரு விஷயமும் உங்களை ஆபத்தில் சிக்கவிடும் என்பதை உணருங்கள்.
தன்னிச்சையான முடிவுகளை எடுக்க மனம் ஆசைப்பட்டாலும் அதற்கான முழுமையான திறனை அடைவது 20 வயதுக்கு மேல் என்பதை உணருங்கள்.
மருத்துவ பரிசோதனை:
வளர் இளம் பெண்களுக்கு வருடம் ஒருமுறை அவர்களுடைய, எடை, உயரம் நிறை குறியீட்டெண் (BMI), கண்பார்வைத் திறன், காதுகேட்கும் திறன் ஆகியவற்றை
பரிசோதிக்க வேண்டும்.டீன் ஏஜ் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி மற்றும் Hep:B தடுப்பூசி ஆகியவை போடப்படவேண்டும்.
பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்(PCOS) போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்.பருவ வயதில் உள்ள ஒவ்வொரு பெண்குழந்தையும் நல்ல பழக்கவழக்கங்களை கற்று ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டு உலகிற்கு வழிகாட்ட முன்மாதிரியாக திகழ வேண்டும்.
- சுரேந்திரன்
|