கொரோனாவை வெல்வோம்!



வைரஸ் 360 டிகிரி குறுந்தொடர்

கொரோனா வைரஸ் என்றால் என்ன?

வைரஸ் தொடரில் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு வைரஸ் தொடர்பாகப் பார்த்துவருகிறோம். இந்த இதழில் சமீபத்தில் உலகம் முழுக்கப் பரவி, லாக் டவுன், சமூக விலக்கல், தடூப்பூசி என்று அனைவரையும் அதிரடித்த கொரோனா வைரஸ் பற்றி பார்ப்போம். கொரோனா நம் உயிரையும் உடமையையும் மட்டும் கொள்ளையிடவில்லை. ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையுமே அசைத்துவிட்டது.

இன்னமுமே கூட கொரோனா அச்சம் முழுமையாக நீங்கவில்லை. புதுப் புது வேரியண்ட்கள் பரவி அவ்வப்போது பீதியைக் கிளபிக்கொண்டுதான் உள்ளது.கொரோனா வைரஸ் என்பது ஒரு பெரிய வைரஸ் குடும்பம். 

இது பொதுவாக மிருகங்களில் காணப்படும் வைரஸ்கள். சில நேரங்களில் இந்த வைரஸ் மிருகங்களில் இருந்து மனிதர்களுக்குப் பரவி, அவர்களின் சுவாச மண்டலங்களை தாக்குகிறது. பெரும்பாலும் இது சாதாரண சளி, இருமல், காய்ச்சல் போன்ற நெஞ்சடைப்புத் தொற்றுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் சில குறிப்பிட்ட வகைகள் மிகவும் ஆபத்தானவை.

 கொரோனாவின் முந்தைய வடிவங்கள்:-
இந்த COVID-19 வைரஸுக்கு முன்பாகவே, கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு முக்கியமான வைரஸ்கள் உலகத்தை அதிரவைத்துள்ளன.

1.சார்ஸ் ( SARS (Severe Acute Respiratory Syndrome)) - 2002

2002 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய SARS வைரஸ் ஒரு கொரோனா வகையைச் சேர்ந்தது. இது முதலில் குரங்குகள் மற்றும் சில வனவிலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவியது என்று நம்பப்படுகிறது. உலகம் முழுவதும் 8000 பேர் பாதிக்கப்பட்டு, சுமார் 774 பேர் உயிரிழந்தனர். மிக வேகமாக பரவிய இந்த வைரஸ் கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்தியது.

2.மெர்ஸ் (MERS (Middle East Respiratory Syndrome)) - 2012

2012-இல் மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய MERS வைரஸ் ஒட்டகங்களிலிருந்து மனிதர்களுக்கு பரவியது. இது SARS-ஐவிட குறைந்த அளவில் பரவினாலும், இறப்பு அதிகமாக இருந்தது (35%). இது பொதுவாக மூச்சுத் திணறல், காய்ச்சல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது.இந்த இரண்டு வைரஸ்களும் கொரோனா குடும்பத்தையே சேர்ந்தவை. ஆனால் அவை கோவிட் 19 போல் உலகளாவிய அளவிலான பெரும் தொற்றாக மாறவில்லை.

கோவிட் 19 (COVID-19) - ஒரு புதிய கொரோனா

2019-ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் நகரில் ஒரு மூச்சுத் தொற்று பரவத் தொடங்கியது. ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, இது ஒரு புதிய கொரோனா வைரஸ் வகை என்பதை உறுதி செய்தனர். இதனை ஆரம்பத்தில் “Novel Coronavirus” எனவும், பிறகு “COVID-19” எனவும் அழைத்தனர் (Coronavirus Disease 2019).

இந்த வைரஸ் மிகவும் வேகமாகப் பரவக்கூடியது. சீன நாட்டில் தோன்றி, சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது. இதனை உலக சுகாதார நிறுவனம் (WHO) 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் “பாண்டமிக்” என அறிவித்தது, அதாவது இது உலகளாவிய பெருந்தொற்றாக மாறிவிட்டது என்பது இதன் பொருள்.

கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

*COVID-19 வைரஸ் முக்கியமாக மூச்சு வழி துகள்கள் (droplets infection) மூலமாக பரவுகிறது.
*ஒருவருக்கு COVID-19 இருந்தால், அவர் பேசும்போது, தும்மும்போது அல்லது இருமும்போது வெளியேறும் சிறு துகள்கள் மூலம் அருகிலுள்ள நபருக்கு பரவலாம்.
*கை கழுவாது முகத்தைத் தொடுவது, அடிக்கடி கை கழுவாதது போன்ற செயல்கள் மூலம் வைரஸ் பரவ வாய்ப்பு அதிகம்.

 அறிகுறிகள்

*ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல், சளி, இருமல், சுவை மற்றும் மணம் இழப்பு, தளர்வு போன்றவை அடங்கும்.
*கடுமையான நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல், நெஞ்சுவலி, உடல் சோர்வு மற்றும் ஆக்ஸிஜன் தேவையுடன் ICU சிகிச்சை தேவைப்படும் நிலை ஏற்படலாம்.
*வயதானவர்கள் அதிக ஆபத்துக்கு உள்ளாகினர்.

உலகத்தின் பதிலடி

COVID-19 எதிரொலியாக உலக நாடுகள் அடிப்படையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுத்தன:

*லாக் டவுன்:மக்கள் வீட்டிற்குள்ளேயே தங்கும்படி கட்டாயமான சட்டங்கள் வந்தது.
*முகக்கவசம் அனைவருக்கும் கட்டாயம்.
*சுற்றுலா தடைகள்:விமானங்கள் நிறுத்தப்பட்டன.
*மருத்துவ வசதிகள் விரிவாக்கம்: புதிய கொரோனா தனிமைப்படுத்தல் மையங்கள், ஆக்ஸிஜன் வசதிகள், ரெம்டெஸிவிர் போன்ற மருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நேரத்தில், மருத்துவர்கள், நர்சுகள், ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றினர்.

தடுப்பூசிகள்

2020-இல் துவங்கி, 2021-இல் முழுமையாக அமலுக்கு வந்த தடுப்பூசி நடவடிக்கைகள் உலக அளவில் ஒரு பெரும் வெற்றியாகக் கருதப்பட்டது.

*இந்தியாவில் Covishield மற்றும் Covaxin போன்றவை பயன்படுத்தப்பட்டன.
*உலகளவில் Pfizer, Moderna, Johnson & Johnson உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.
*தடுப்பூசிகள் பலருக்கு உயிர் காக்கும் அரணாக இருந்தது.
* பலருக்கு வைரஸ் வந்தாலும், தடுப்பூசி போட்டிருந்ததால்,மரண எண்ணிக்கை குறைந்தது.

என்ன கற்றுக்கொண்டோம்?

1. சுகாதார பழக்கவழக்கங்கள் மிக முக்கியம்.முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளி பேணுதல் போன்றவை நோய்களை தடுப்பதற்கு முக்கியமானவை என்பதை உணர்ந்தோம்.
2. அறிவியல் மற்றும் ஆராய்ச்சி உலகம் முக்கியம்.
மிகச் சிறிய காலத்தில் தடுப்பூசி உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் மனித குலத்திற்கு ஒரு ஆபத்பாந்தவனாக இருந்தனர்.
3. மனநலமும் முக்கியம்.

தனிமை, பயம், நம்பிக்கை இழப்பு ஆகியவை மனநலத்தை கடுமையாக பாதித்தன. மனநல கவனம் இல்லாமல் மருத்துவம் முழுமையடையாது.COVID-19 எனும் கொரோனா வைரஸ் நம்மை பல வகைகளில் சோதித்தது. ஆனால் அதே சமயம், நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் அதை விரட்டி அடித்தளம்.நோயைக் கண்டபின் அல்ல, வரும் முன் காத்து வாழ்வதே உண்மையான சுகாதாரம்.

நான்கு விஷயங்கள் மறக்காமல் வைத்துக்கொள்ளுங்கள்:

*துல்லியமான தகவல்களை மட்டும் நம்புங்கள்.
*எந்த சந்தேகம் வந்தாலும், உடனே மருத்துவ ஆலோசனை பெருங்கள்.
*மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை மற்றும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.
*சமூக பொறுப்பு, சுத்தம், சுகாதாரம் - இவை மூன்றும் உங்கள் உடல்நலத்துக்கான அடித்தளம்.

இவற்றை மனதில் வைத்துக்கொண்டால் கொரோனா மற்றும் ஏனைய கிருமிகளை விரட்டி அடிக்கலாம்.

பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல்